யாராவது பேச அழைத்தால் ஆசைக்கு சரி என்று சொல்லி மேடையில் அட்டூழியம் செய்து விடுதல் தவறு.

எந்த நூலைப் பற்றி பேசுகிறமோ அந்த நூலை முடிந்தளவு உள்வாங்கி முழுதாக படித்திருக்க வேண்டும் என்பது நியதி. அது அடிப்படை அறமும் கூட. ஆனால் சிலர் அப்படி இல்லை. அப்படி இப்படி மேம்போக்காக புரட்டி விட்டு சொந்தக் கதை சோகக் கதை என தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை இடைச்செருகலாக செருகி.. ஒப்பேத்தி விடுகிறார்கள். சிலர் இன்னும் மோசம். இடைச்செருகலாக கூட அந்த குறிப்பிட்ட நூலைப் பற்றிய விவரிப்புகள் இருப்பதில்லை. பேச வேண்டிய புத்தகத்தில் ஆரம்பித்து விட்டு பிறகு தனக்கு தெரிந்த எல்லா கோலத்தையும் கசகசவென போட்டு விட்டு இப்படியாக அந்த கம்பம் மாடு கட்ட பயன்படுகிறது என்று முடித்து விடுகிறார்கள். பேச வந்த தலைப்பு என்னவோ மாடு. பேசினது என்னவோ கம்பம்.

அதே போல இடையிடையே கோட் பண்ண மற்ற நூல்களைக் குறிப்பிட்டு காட்டுவது இயல்பு. ஆனால் குறிப்பிட்டு காட்டக்கூடிய நூல்களை பற்றிய செய்திகளையே - அதாவது தனக்கு நன்கு தெரிந்தவைகளையே.... பேச கொடுத்த நேரத்தில் முக்காவாசி நேரம் பேசினால் அது எப்படி இருக்கும்.

கையில் பேச வேண்டிய நூல் ஆடிக்கொண்டிருக்கும். அவரோ அவருக்கு பிடித்த இவரின் வரிகளையே பிராண்டிக் கொண்டிருப்பார். மேடையில் பூச்சி போல அமர்ந்திருக்கும் பேச வேண்டிய நூலின் ஆசிரியன்.... கண்களில் கரப்பான் பூச்சி சிறகடிக்க பார்த்துக் கொண்டிருப்பான். எத்தனை கொடூரமான காட்சிக்கு கோர்வை இது.

எதற்கு பேச அழைப்பது. குறிப்பிட்ட நூலை கொஞ்சம் பேசி கீசி இலக்கிய கூட்டத்தில் அறிமுகம் செய்து பரவலாக்க வேண்டும் என்பதற்கு தானே. ஆனால் பேச வந்த பெரியவர்கள் என்ன செய்கிறார்கள். இந்த நூலை மேம்படுத்துவதாக இன்னொரு நூலை அதுவும் தனக்கு நன்கு அறிமுகமான தன்னால் நன்றாக உள்வாங்கப்பட்ட நூலைப் பற்றி பேசி... அதோடு ஒப்பிட்டு.. அந்த நூலாசிரியர் ஊரறிந்த ஒருவராக இருப்பார். இந்த மேடை இலக்கிய உலகுக்கு ஒதுக்குபுறமாக உக்காந்திருக்கும் எழுத்தாளனுக்கானதாக இருக்கும். ஆனால் இந்த மேடையிலும் ஊரறிந்த அவரைப் பற்றி பேசி அவரை தனக்கு தெரியும் என்று காட்டிக் கொள்வார்.கரகோசமும் அந்த ஊரறிந்த எழுத்தாளருக்கே போய் சேரும். பொசுக் பொசுக்கென பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நூலாசிரியரின் நிலையை யோசித்துப் பாருங்கள். தனக்கான கூட்டத்தில் தானும் படக் படக் என்று கை தட்டுவது எத்தனை கொடுமை. இப்பெல்லாம் சில கல்யாண மேடைகள்ல மாப்பிள்ளையை ஒதுக்கிட்டு பொண்ண சுத்தி ஒரு கூட்டம் நின்னு ஆட்டம் போடுதே. அப்பிடி.

நல்லதோ கெட்டதோ சம்பந்தப்பட்ட நூலாசிரியர் தான் போகஸில் இருக்க வேண்டும். அதை விடுத்து உதாரணங்களோடு கபடி ஆட விடக்கூடாது.

இதே மாதிரி ஒரு புக் படிச்சேன் என்று பேசுவதே இந்த புக்குக்கு செய்யும் அநீதி இல்லையா. இதைப் படிக்கவும் அந்த நூல் நினைவுக்கு வந்து விட்டது என்றால் இந்த நூலை சரியாக படிக்கவில்லை என்று தானே அர்த்தம். சரியாக படித்திருந்தால் படித்த இந்த நூல் தானே நினைவில் இருந்திருக்கும்.

ரெண்டு கதைகளை.... அதுவும் சுலபமான ரெண்டு கதைகளை படித்து விட்டு வந்து மொத்த நூலை மேய்வது.. நாலைந்து சின்ன கவிதைகளை உள்வாங்கிக் கொண்டு வந்து தங்களுக்கு தெரிந்த கவிஞர்களை உள்ளே இழுத்து அடித்தோட்டுவது.. நாவல் என்றால் முழுவதையும் படிப்பதேயில்லை. அதே அஞ்சாறு அத்தியாயங்களை உருவி விட்டு வந்து மேடையில் தானாக உருட்டுவது. அண்ணனின் இரண்டு நாவல்களை திசை மாற்றிய பெருமை பேசியவர்களுக்கு உண்டு. செதில் செதிலாக நம்மை வெட்டி வீசிய தருணம் அது.

நன்றாக பேசக்கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் அழகாக அற்புதமாக உள்ளது உள்ளபடி பேசி விட்டு சென்று விடுவார்கள். அதுவும் நடந்திருக்கிறது.

இன்னொருவர் நூல் பற்றி பேசுகையில் தன் எழுத்தையும் உள்ளே சேர்த்துக் கொள்வதெல்லாம் சிறுபிள்ளை செயல் இல்லையா. எங்கு சுற்றினாலும் மையம்... பேச வேண்டிய நூலில் இருக்க வேண்டும். இங்க மைக் மட்டும் தான் பேச வேண்டிய நூலில் இருக்கிறது. மற்றபடி மண்டைக்குள் இருப்பதெல்லாம் மசாலா தடவி பிரெட் ஆம்லெட் அல்லவா போட்டுக்கொண்டிருக்கிறது.

எந்த நூலைப் பற்றி பேச இருக்கிறோமா.. அந்த நூலின் ஆசிரியர் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசுவது தானே முறை. நீங்க கவிதைகள் எழுதினா... உங்களுக்கு நன்றாக வரும்.. உங்க சிறுகதையில் கவித்துவம் நிறைய இருக்கு என்று பேசியவரை ஆச்சரிய எமோஜி பொம்மையாக பார்த்துக் கொண்டே இருந்தேன். வேறென்ன சொல்வது. அவருக்கு நம்மை யாரென்றே தெரியவில்லை என்று தானே அர்த்தம். நாம்தாம் அவரை பேச அழைத்தோம். நாமே இப்போது ஊமையாகி நிற்கிறோம். நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் தருணம் அது.

எழுத்தை தொழிலாக கொண்டவர்கள் மேல் கரிசனம் காட்டுகிறேன் என்று ஐயோ பாவம் ரேஞ்சில் அதாவது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தடுமாற போகிறார் எழுத்தாளர் போன்ற பாவனையில் எல்லாம் பேசாதீர்கள் பெரியோர்களே. நீங்களும் நூத்தம்பது வருஷம் இங்கு வாழப் போவதில்லை.

இன்னொருவர் நூல் பற்றி பேசி தான் புகழடைய நினைக்கும் புத்தியில் அறிவு ஆயுசுக்கும் ஒட்டாது. அந்த நூலுக்கு நியாயம் செய்ய தான் அழைத்திருக்கிறார்கள். நல்லா இருக்கு நல்லா இல்லனு சொல்லணும். அத விட்டு யோசனைங்கற பேர்ல இப்பிடி எழுதி இருக்கலாம்..அப்படி எழுதி இருக்கலாம்னு சொல்றது ஒரு படைப்பாளியின் புத்திக்குள் அத்து மீறும் செயல். நாம் வந்ததே முகவரி அற்று நிற்கும் வீட்டுக்கு விலாசம் தருவதற்கு தான். அந்த வீட்டிலேயே நானும் குடியிருப்பேன் என்று சொன்னால் எப்படி. டீசல் இன்றி நிற்கும் வண்டியை சற்று தள்ளி விடுவதற்கு தான் வந்திருக்கிறோம். அதன் மீதே ஏறி சவாரியும் செய்வேன் என்றால்... எப்படி எப்படி.

மேடைக்கு வந்த பிறகுதான் கக்கத்தில் நூல் கொண்டவர்கள் எல்லாரும் நம்பிக்கையூட்டுபவர்கள் இல்லை என்று தெரிகிறது. கவிஞன் குழந்தை போல எல்லாரையும் நம்புவான்.

யுத்தன்