தூரத்தில் புள்ளியாய் வட்டமிட்டலையும்
ஒரு பெயரற்ற பறவைக்கு
சிறகுகள் வாய்த்தது தேடுவதற்கா தொலைவதற்கா ?
நீ சிந்திய புன்னகை சிதறிய இறகுகளானால்
இனி ஒரு போதும் அவை பறப்பதற்கு உதவாது
பார்த்தவுடன் மறைந்து விடும் நிலவைத்தானே
மனம் விரும்புகிறது
நிலவு என்ன பார்த்துக் கொண்டேயிருப்பதற்கா?
உன் இதயத்திலிருந்து என்னிதயத்திற்கு
துயரத்தைப் பாய்ச்சும்
மறந்து போன
ஒரு கடவுச் சொல்லைத்தானா
நினைவு கூர்ந்து
கத்தித் தீர்க்கிறது
இந்த அக்கா பறவை
வார்த்தைகள் மரித்துக் கொண்டிருக்கும்
நிசப்த மயானத்தில்
மௌனங்கள் ஊழிக்கூத்திடுவது
நினைவுகளின் வழி தானோ?
கருவண்டுகள் மோதுவதாலா காட்டு மூங்கில்கள்
புல்லாங்குழல்களாகின்றன
இல்லை தன்னைத்தானே
துளையிட்டுக் கொள்வதாலா?
கொத்து மஞ்சளரளிக்குள்
சுயமழிந்து கொண்டிருக்கும்
தேன் சிட்டு
இன்று பிதற்றுவது உன்மத்தத்தில் தான்
என்றால்
பூக்கள் உயிர் குடிக்கும் இராட்சதத் தேனீக்கள் தானே?
சிறகுகள் வாய்த்தது தேடுவதற்கா தொலைவதற்கா
தூரத்தில் புள்ளியாய் வட்டமிட்டலையும்
ஒரு பெயரற்ற பறவைக்கு
- தங்கேஸ்