நீ அனுப்பி வைத்த
வாலாட்டிக் குருவிகள்
நீண்ட மின்கம்பியை
நரம்புக் கருவியாக்கி
இசைக்கிறது நம் பெயரை
வாசலில்.
பூவரசுமர நிழலில்
சிறகுகளைக் கோதும்
மைனாவின் கூரலகில்
ஒட்டிக் கொண்டு
பாடத் தொடங்குகிறது
உச்சி வெயில் .
அணிலின் கீச் சத்தம்
அடர்ப் பிங்க் நிறத்தில்
கிளைகளில் எட்டிப் பார்க்கும்
வேப்பம்பூ மொட்டுக்களின் வாசனையை
மேகமூட்டம் நிறை
மித வெப்பக்காற்றில் பரப்புகிறது.
அருகில் நீயில்லாதது
நெடுங்கோடைதான் என்றாலும்
என் வேம்பிற்கு
மூலிகைக் காதல் நிறை
லட்சம் மூக்குத்திகள்
சூட்டிவிட்டவள் நீதானே.

- சதீஷ் குமரன்