girl_207ஒருமுறை
கடற்கரைக்குச் சென்றபோது
கண்ணீரைச் சேமித்து
வைத்திருந்த குப்பி
தவறி விழுந்துவிட்டது
கடலில்..

அதற்குப் பிறகான நாட்களில்
கடல்நீர் இன்னும் கரிப்பதாய்
கடலோர மக்கள்
பேசிக் கொண்டிருப்பதாக
யாரோ சொல்ல..

மீதமிருந்த
கொஞ்சம் புன்னகையை
குப்பியில் நிரப்பிக் கொண்டு
கடலை நோக்கி விரைந்தேன்..

எனக்கு முன்னதாக
ஒருவன் தன் புன்னகையின்
குப்பியை கடலில்
மிதக்க விட்டிருந்தான்..
என்னிடமிருந்த புன்னகையை
அவனிடம் சேர்ப்பித்துவிட்டு
திரும்பினேன்..

ஒரு மாலையில்
மக்கள் பேசிக் கொண்டனராம்
வலையில் விழும் மீன்களுக்கு
பற்களின் எண்ணிக்கைக்
கூடியிருப்பதாக...

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It