
வார்த்தைகளே இன்றி
ஒரு கவிதை சொல்கிறாய்...
இனி என் கவிதைகளை
என்னவென்று சொல்ல...
__________________________
என் கவிதைகள் அனைத்தும்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறார்கள்...
பேரழகி உனக்குப் பிறந்தவைகள்
வேறெப்படி இருக்கும்...
________________________
நீ கடந்து செல்கையில்
இதயம் அதிர்வது
புதிதில்லையே என்று
அன்றொருநாள் தரை
அதிர்ந்ததில் சும்மா
இருந்துவிட்டேன்...
இனிமேல் அப்படி நடந்தால்
நீயாவது சொல்லிவிட்டு போ
நில நடுக்கம் என்று...
__________________________
உனக்காகக் காத்திருக்கையில்
பிறந்தேவிடுகின்றன
சில கவிதைகள்...
ஆயினும்,
கருவாகவே இருக்கிறது
என் காதல்
சொல்லப்படாமல்...
___________________________
ஒரு குழந்தையிடம்
விளையாட பொம்மை
கொடுப்பதுபோல்
எனக்கு உன் நினைவுகளை
கொடுத்துவிடுகிறாய்
நம் சந்திப்புகளின்
போது ஏற்படும் தாமதங்களில்...
____________________________
தேவதையே,
உனக்கே தெரியாத காதலை
எப்படி உன்னால் மட்டும்
எனக்கு கற்றுத்தர
முடிந்தது...
____________________________
வீட்டிற்கு வந்தும்
கோயில் திருவிழாக்களில்
பார்த்த பொம்மைகளைப்
பற்றியே பேசும்
குழந்தைகள் போல
என் கவிதைகள் அனைத்தும்
உன்னைப் பற்றியே
பேசுகின்றன எப்போதும்...
_____________________________
நீ மழையில் நனைந்து
மழையில் நனைதலைக்கூட
அழகாக்கிவிட்டாய்...
உன்னுடன் நனைய விரும்பி
மழை நேற்று முழுவதும்
கொட்டிக்கொண்டிருந்தது...
_____________________________
மழைக்குக் குடை
பிடித்தாய்...
குடைக்கு உன்னைப்
பிடித்துவிட்டது போலும்...
விரிந்த குடை
மடங்க மறுக்கிறது...
_____________________________
மழை நாட்களில்
நீ எதிரில் வந்தால்
கன்னத்தில் போட்டுக்கொள்வேன்...
கர்ப்பக்கிரகத்தில்
தேவி சிலை போல
அந்த கருப்புக் குடைக்குள்
ஸ்ரீதேவியாய் நீ...
- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )