பெற்றோரின் பார்வை
தாங்காதென்பதால்
காதல் மலரை
மனதில் மறைத்தாள்.
கணவனின் கண்கள்
பொறுக்காதென்பதால்
கவிதைப் பூக்களை
கனவில் ஒளித்தாள்.
புகுந்த வீட்டார்
புருவம் உயர்ந்திடுமென
நாட்டிய நடனத்தை
நிழலில் ஒதுக்கினாள்.
குழந்தைகள் மகிழ
வேண்டுமென்பதற்காகத்
தனக்குப் பிடித்த அனைத்தையும்
ஒரு பட்டியலாக்கி,
தீயில் பலியாக எரித்தாள்.
கல்லூரி விடைபெறும்
விழாவில் பெற்ற
‘தைரியலட்சுமி’ பட்டத்தை
வரவேற்பறையில் பளிச்சென மாட்டி,
வாழ்க்கையின் மறைவை
மௌனமாய் சுமந்தாள்.
- அ.சீனிவாசன்