ஓடித் திரிந்து ஓய்ந்திருக்கும்
கால்களின் உலகம்
நான்கு கால்களின்
தயவில் ஓய்வெடுத்தது.
அவ்வப்பொழுது முட்டும்
மூத்திர உபாதைக்கு
வேறு இரண்டு கால்கள்
தேவைப்பட்டது.
ஆறுக்கு மூன்றாக
அமைந்திட்ட இருப்பிடத்திற்கு
மென்மையின் சுபாவமிருந்தாலென்ன
முள்ளெனத்தான் குத்தும்
அதற்குமொரு
ஆசுவாச இடைவெளிகள்
அற்றுப் போனால்.
துரத்தியோடி
கவ்விக் கலவியில்
கிடக்க
வராதுபோன பல்லிக்கும்
மாதவிடாய் காலமாகவும்
இருக்கலாம்
மனைவியைப் போல.
பால்யத்திலிருந்து
பார்த்துப் பதறும்
பெண்களின் இப்பேரவதிக்கு
அனுசரணையாக
ஆணிடமொரு
உபாயம் இருந்திருக்கலாம்
வெறுப்பின்
வேதனைகளை மாற்றுவதற்கு.
எப்பொழுது
எடுக்கப் போகிறீர்களென
என் கண் முன்னே
தொங்கும் வாகனத்தின்
சாவிகளுக்கு
வேதனைச் சிரிப்பைத் தவிர
வேறொன்றுமில்லை
என்னிடம் இப்பொழுது.
கரையும் காகம்
கல்லூரியில் பழகியதா.
அதன் பிறகு
அலுவலகத்தில்
பழகியதாவென
எப்படி அறிவது
இச்சிறைச் சுவர்களைக் கடந்து.
நான் விரும்பிய
நடுநிசியை அவலமொன்று
கொத்தித் தின்கிறது
என்னையே சாட்சியாக்கிய
ரணத்தில் எப்பொழுதும்
பின்னிரவுகளில்.
காணாது போன
கீரைக்காரக் கிழவி
எனக்கு என்னவானதென்று
நினைத்திருக்கும்
பார்க்காது போன
பதைபதைப்பில்.
இலவசமாக கீரையை
உணவாக்க முடியாதென்ற
என் கொள்கையும்
மீதிப் பணத்தை
தூக்கிச் சுமக்க முடியாதென்ற
அதன் நேர்மையிலும்
வாய்த்த கடைசி நாள்
சந்திப்பின் பிறகு
சேலை மாற்றி சேலை மாற்றி
முந்தானையில்
முடிந்து வைத்திருக்கும்
மீதிப் பணத்தை
எப்பொழுது பெறுவது?
வாடிக்கையாக கையேந்தி
வாங்கிச் செல்லும்
முதியவருக்கு
என் காலொன்று பழுதுபட்டதை
யார் சொல்வார்கள்?
நரி பிடிக்கும் சமூகமென
நாயை விட கேவலமாக
பார்க்கும் தோழனொருவனின்
தோள் பிடித்து
அணைத்தபோது
நடுங்கி தேம்பியவன்
நாளும் பொழுதும்
எதிர்பார்ப்பானே
என்னை
நான் என்ன செய்ய.
வெள்ளிக்கிழமை தோறும்
விருந்துண்ட முதியவர்களும்
எதிர்பார்த்து
ஏங்கி இருப்பார்களே
அனிச்சையென
அவர்களைப் பழக்கி இருந்ததால்.
ஊர் பெயர்
எதுவுமறியாது
உறவாடிக் கிடந்த
எளிய மனிதர்களின்
கூட்டம் எனக்கிருக்கிறது
என்பதற்காகவாவது
பழுதடைந்த பாதம்
சீக்கிரம் சீராகலாம்
பயணப்பட்டு அவர்களை
பார்த்து விடுதற்கு.
- ரவி அல்லது