கீற்றில் தேட...

கடவுளுக்குத்தான் மூன்று நாட்கள்
காதல் அப்போதே
அக்கணமே உயிர்த்தெழும்

*
வரிகளில் கவனி
இதழ் விரியும் தருணமும்
இருக்கலாம்

*
மதிய வெயிலில்
வெள்ளிச் சலங்கைகளை
நதியில் கொட்டியவன் யார்?

*
காற்றில் ஆடுபவனோடு
தொற்றிக் கொள்கிறது
ஊஞ்சல்

*
புத்தகத்தை கன்னம் கிள்ளி வைக்கிறாள்
அவ்வப்போது பக்கங்களை
மடித்து மடித்து வைக்கிறவள்

*
கால் தொடும் அலைகளை
ஆசீர்வதித்து அனுப்புகிறார்கள்
குழந்தைகள்

*
றெக்கை அடித்து அடங்குகையில்
ஒரு துளி கடல்
தூர தேசப் பறவை முதுகில்

*
தண்ணி லாரி வந்து விட்டது
வரிசையில் சமத்துப் பிள்ளைகளாய்
வீதிக் குடங்கள்

*
கடைசி வரை கடவுளை
பொம்மை என்றே
சொன்னது குழந்தை

*
கண்கள் மூடிக்கொண்ட பூனை
தன்னோவியம் வாசிக்கிறது
கவனி

- கவிஜி