அழுக்கைச் சுவைக்க
ஆசை கொண்ட
ஆற்று மீன்களைப் போல
காலத்தைச் சுவைத்து
தின்கிறது மனது
கடந்த காலம் நம் குதிகாலில்
திரண்ட அழுக்கு
ஆறு தான்
புனிதப்படுத்துவதாக
சொல்லும் நாம்
சிறிய படித்துறை
மீன்களையும்
நண்டுகளையும்
நாரைகளையும்
நீர்ப் பாம்புகளையும்
வசதியாக மறந்து விடுகிறோம்
சின்னவயதில்
தாவி வந்து நம் மேல்
பாய்ந்த ஆறு
இன்றும் பாய்ந்து
கொண்டே தானிருக்கிறது
மனதில்
குட்டி குட்டி அயிரை மீன்களை
கோபித்துக் கொள்ளக் கூடாது
என்று எப்போதும்
சொல்லியிருக்கிறாள் அம்மா
தன் அஸ்தியை அவைகள்
சுவைத்து விழுங்கிய போதும்
அவளுக்கு கோபம் வந்திருக்காது
எந்த ஒரு பயணத்திற்கு முன்பும்
ஒவ்வொன்றையும் மறக்காமல்
எடுத்துச் செல்லும் அம்மா
தன் சிறிய நினைவொன்றைக் கூட
உடன் எடுத்துச் செல்ல
மறந்து விட்டாள்
தன் கடைசிப் பயணத்தின் போது
இன்னும் வற்றாமல்
ஓடிக் கொண்டேதானிருக்கிறது
அம்மாவின் அஸ்தியைக் கரைத்த ஆறு
- தங்கேஸ்