கீற்றில் தேட...

1. தெய்வீகமல்ல

கடவுள் வந்து சொல்லட்டும்,
இது தெய்வீகக் காதல் அல்ல என்று.
நானே விலகிக் கொள்கிறேன்.

2. பிரிவின் கவிதை

பிரியும் போது,
நீ உதறிச் சென்ற
அந்த நொடியைத்தான்
நான் கவிதையென்று
இப்போதும் உளறுகிறேன்...

3. மென்மையான வீழ்ச்சி

மென்மையாக வீழ்கின்றன
மலர்கள்,
பறவைகள்,
நம் நினைவுகள்...
மற்றும்
நம் காதல்.

4. அளவிலா காதல்

நம்மைப் போல் அல்லாமல்,
நம் காதல்:
அளவிலி, முடிவிலி,
வடிவிலி, திசையிலி!

நம்மைப் போல் அல்லாமல்,
நம் காதல்
ஒருபோதும் தோற்காது.

5. கடைசி தேனீர்

கடைசியாக
உன்னோடு அருந்திய
தேனீர் போதும் -
வழித்துணைக்கும்,
வலித்துணைக்கும்

6. உனக்கு மட்டுமே

உனக்கு மட்டுமே முடியும்:
யாராலும் நேசிக்க முடியாத
அளவுக்கு
என்னை நேசிக்க!

உனக்கு மட்டுமே முடியும்:
யாராலும் வெறுக்க முடியாத அளவுக்கு
என்னை வெறுக்க!

7. மறுப்பின் உண்மை

உண்மையில்,
நீ என்னை வெறுக்கவில்லை -
மறுக்கிறாய்.

இந்த உண்மையை மட்டும்
உணர்த்திவிடு.
விலகிக் கொள்கிறேன்.

8. பறவையின் தத்துவம்

எந்தப் பறவையும்
தன்னைவிட உயரே
பறப்பதைக் கண்டு
பயப்படுவதில்லை;
தன்னைவிட கீழே பறப்பதைக் கண்டு
கேலி செய்வதுமில்லை.

பறவைக்கு பறப்பதே ஒரே நோக்கம்...

9. கவலையின் கலை

கவலைப்படாமல் இருப்பதும்
ஒரு கலை;
கவலைப்படுவதும்!

10. வாழ்வின் தேடல்

வாழ்வின் தேடல் என்பது
நம்மைப் போலவே கவலையுடைய
மற்றொரு மனிதனைக் கண்டுபிடிப்பது.

முதிர்ச்சி என்பது
அவனை நண்பனாக்கிக் கொள்வது!

11. பிறர் கவலை

பிறர் கவலை என்னை
சோகப்படுத்துவதில்லை,
நிலைகுலையச் செய்வதில்லை.

அதை ஏற்று,
என் கவலைகளை
அனாதையாக விட்டு விடுகிறேன்.

கவலைப்பட வேண்டுமென்றால்
பிறருக்காகக் கவலைப்படுகிறேன்.

12. துயரமே தாராளம்

உன்னால்
எனக்குத் துயரம் மட்டும்தான்
கொடுக்க முடியுமென்றால்,
அதையே தா.

ஏனென்றால்...
அதுவும் ஒரு வகையில்
உன்னை இழக்கவில்லை என்பதின்
ஆறுதல்தான்.

13. விளக்கின் கண்ணீர்

வேலை முடிந்தவுடன்
கைவிடப்படும் விளக்கு,
தன் கண்ணீரை
புகையாக வடிக்கிறது.

14. காத்திருப்பின் முடிவு

காத்திருப்பை முடிக்க
நானும் காத்திருக்கிறேன்.
எல்லா காத்திருப்புகளும்
அதற்காகவே!

15. சிறகில்லா பறப்பு

பறவைக்கு மட்டுமே
பறப்பதற்குச் சிறகு தேவை.
எனக்கல்ல!

- அ.சீனிவாசன்