கீற்றில் தேட...

பாதி கழுவிய வலுவலுப்பில்
மங்கியொழுகும் குவளைகள்
அவசரத்திற்கு எப்போதும்
கிடைத்திடாத கரண்டிகள்
பொடிசுகள் தைரியமாய்
கையாள முடிந்த கத்திகள்
தண்ணீர் ஊற்றி சுத்தினாலும்
அரையாது அடம்பிடிக்கும்
தேங்காய் துண்டுகள்
எறும்பின் நகர்வு இல்லாது
சுவைத்திட முடியா திண்பண்டங்கள்
எப்போது போட்டாலும்
அட்டூழியம் பண்ணும்
தொலைக்காட்சி அமைப்புகள்
நாள் பூராய் துவைப்பதாய்
சுழற்றிக் கொள்ளும்
சலவை இயந்திரம்

எல்லாம் அதனதன் போக்கில்
சோதிக்கும் சுதந்திரம் கொண்ட
பாட்டி வீட்டிலிருந்து
வெளியேறுகிறாள் சிறுமி ஒருத்தி
விழுந்து கிடந்த ஒற்றை பனம்பழம்
எடுக்க வந்த ஆசையுடன்..

- ஷினோலா