கீற்றில் தேட...

hennaஎல்லோருடைய வீட்டிலிருந்ததுபோல
எங்கள் வீட்டிலும்
மருதாணிச் செடி இருந்தது.
எல்லோருக்கும் போல
அதை அரைத்துப் போட்டதும்
எங்களுக்கும் சிவந்தது.
எல்லோருடைய வீட்டிலும்
மல்லிகை இருந்தது.
அது மலரும்போது
மணத்தது.
எல்லோருடைய வீட்டிலும்
செம்பருத்திச் செடி இருந்தது.
அது சிவப்பாகத்தான் பூத்தது.
எங்கள்
வீட்டுச் செடியிலும்
இரண்டு பூ பூத்தது.
ஒன்று சிவப்பாக
ஒன்று மஞ்சளாக இருந்தது.
ஒவ்வொரு முறையும்
இப்படியாகவே பூத்ததால்
அவர்களெல்லாம்
இவர் கொஞ்சம்
விசேசமான ஆளென்று
தங்களுக்குள்ளே
பேசிக் கொண்டார்கள்.
ஆமாம் நானும்
சொல்லிக் கொண்டேன்.
நாம் கொஞ்சம்
விசேசமான ஆள்தான்.
எட்டி எட்டி
பார்த்துச் செல்லும்
எல்லோருமே
நான் புனித நீரூற்றி
வளர்த்தேனென்று
சொல்ல வேண்டுமென்று
எதிர்பார்த்தார்கள்.
ஒவ்வொரு முறையும்
வீட்டிற்கு மேலே
படியேறும்பொழுதெல்லாம்
உன் பங்கிற்கு
நீ வேறயா என்று
நினைத்த ஒரு நாளில்
ஆரஞ்சு நிற
மொட்டொன்றில் அசத்தி
மயங்கமுறுமாறு செய்துவிட்டது.
இப்படியாகத்தான்
இவர்கள் ஒரு புனிதனை
உருவாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
நல்லவேளை
நான் உண்மையை
சொல்லித் தொலைத்தேன்.

- ரவி அல்லது