கரையெங்கும் கண்டெடுக்கப்படும்
கண்கவர் சிப்பிகள்
கடற்காற்றை உள்ளடக்கிய
சலசலப்பில் சங்குகள்
முங்கி எழுந்த உற்சவத்தில்
காணாமற்போன காதணிகள்
ஓசையற்ற உளைச்சலில்
ஒதுங்கிக் கிடக்கும்
ஒற்றைக்கால் கொலுசுகள்
ஈரப் பாதங்களை பற்றியே நடக்கும்
மணற்துகள் என
எடுத்துச் செல்வோர்க்கு
ஏராளமும் தாராளமும் இருக்கின்றன
கொடுத்துவிட்டு செல்வதற்கோ
கொடுப்பினையின்றி
முந்தியடித்து வரும்
அலையின் துள்ளலில்
முன்னும் பின்னுமாய் தள்ளப்பட்டு
விரிந்த விரல்களோடு
விடப்பட்டு நிற்கிறேன்...
மெல்ல விடுபடுகிறது
நினைவு வடுக்கள்
மெல்ல கரைகிறது
உறைந்ததோர் இறுக்கம்.
- ஷினோலா