கீற்றில் தேட...

கருமையை ஒரிரு இறகினில்
ஒற்றிக் கொண்டு
விண்ணிலிருந்து இறங்கும்
ஒரு பெயரற்ற பறவை
இன்றைய பூமிக்கான இரவை
அநேகமாக தன் சிறகுகளில்
ஏந்தி வருகின்றது

அண்ணாந்து பார்க்கிறேன்
ஒரு நட்சத்திரத்திற்கும்
மறு நட்சத்திரத்திற்கும்
இடையில்
கருவுற்றுக் கொண்டிருக்கின்றன
எண்ணற்ற
குட்டி குட்டி நட்சத்திரங்கள்

கருப்பு திரைச்சீலையில் ஒட்டாமல்
நழுவிக் கொண்டிருக்கும்
ஒரு கோட்டோவியம்
யார் யார் வாழ்க்கையையோ
திரைச்சீலையாக்கிக்
கொண்டிருக்கிறதோ!

- தங்கேஸ்