பெரும் வெப்பத்தின்
புழுக்கம் துடைத்தெறிந்த
அண்மை மழை
உன் நினைவென
ஈரம் தெளித்து
குளிர்கிறது நிலம்.
நிலங்கள் விழுங்கி
வெறும் சாலைகள்
மண்டிய வாழ்வெளியில்
கரிப்புகை டீசல் புகையில்
முகத்தில் கரி பூசி
மூச்சடைத்துக் கிடந்த
மரங்கள், தாவரங்கள்
மழையில் குளித்து
செத்துப் பிழைத்தவன் போல
துளிர்த்தெழுந்து பரவசமாய் நின்றாடுகிறது,
தகிப்பில் கொதிப்பேறிய காற்றும்
சாரலிலாடி ஈரவாசனையை
எழுதிப் போகிறது...
தன்குளம் தூர்த்த
பொக்கலின் மேலமர்ந்து
சத்தமிடும் மீன் கொத்தியின்
அறச் சீற்றம் எழுத
எவருண்டு இம் மாநகரில்
- சதீஷ் குமரன்