கீற்றில் தேட...

புரிந்ததாக புன்னகைப்பாய்
புரிந்திருக்காது
தெரிந்ததாக
நினைத்துக் கொள்வாய்
தெரிந்திருக்காது

வழி கண்டுபிடித்து விட்டதாக
சொல்வாய்
சற்று தூரத்தில்
நான்காய் பிரியும் அது
ஆறுக்கும் எட்டுக்கும்கூட
வாய்ப்பிருக்கிறது

உலகம் அறிந்து கொண்டதாக
அறிவிப்பாய்
உள்ளத்தின் கீறல் அறியாய்

ஊர் பிள்ளைகள்
அப்படித்தான் என்பாய்
உன் பிள்ளைகள் எப்படி
தெரியாய்

உதவி செய்ய
வானம் பொத்துக்கொண்டு
இறைவன் வருவார் என்பாய்
எதிர் வீட்டுக்காரன் உதவிக்கு
தலை காட்ட மாட்டாய்

நெருங்கிய சாவுக்கும்
செய்தி வர காத்திருப்பாய்
அங்கும் மரியாதைக்கு
வேர்த்து பூத்து நிற்பாய்

மனிதர்களைப்
புரிந்து கொண்டதாக
வாய் கிழிவாய்
தூய்மைப் பணியாளருக்கு
தண்ணீர் தர யோசிப்பாய்

வெள்ளையே தூய்மை என்பாய்
மாற்றி மாற்றிப் பேசுவதை
வேதாந்தம் என்பாய்

மரித்தால் பிண்டம்
என்பதை மறந்து
நீ மட்டுமே அளவெடுத்து
பிறந்தது போலவே
பிதற்றித் திரிவாய்

எது ஒன்றுக்கும்
அந்தக் காலத்துல என்று பேசுவாய்
எல்லாவற்றுக்கும் மேல
அவ்வப்போது திடும்மென
ஆரம்பிப்பாய்
வாழ்க்கைங்கறது...

தெறித்து ஓடுகிறோம்...!

- கவிஜி