சோப்பு நுரைகளைப் போல
மிதந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை
கைகளில் அள்ளிக் கொள்ளத்
தோன்றுகிறது இப்போது
இது போல ஒரு அலாதியான பிரியம்
வாழ்வில் எப்போதும் வந்ததேயில்லை
பச்சைப் பசுங்குழைகளை
கறிச் கறிச்சென
கடித்துத் தின்னும் வெள்ளாடுகளின்
பல்லிடுக்குகளில்
விரல்களை நுழைக்கலாம் என்ற
உன்மத்தமும் இப்படி வந்தது தான்
இன்னும் பறக்கப் பழகாத
பச்சிளம் பட்டாம் பூச்சியை
குண்டு பல்புக்கு அருகில்
கபளிகரம் செய்து விட்டு
கண்களை உருட்டி உருட்டி
முழித்துக் கொண்டிருக்கும்
இந்த முற்றிய பல்லியைக் கூட
மன்னிக்கத் தோன்றுகிறது
கிணற்றுக்குள் கிடந்த நிலவை
வாளி வைத்து இறைத்து
வெளியே வீசிவிட்டது போல்
உள்ளுக்குள் இருந்த மனதை
ஒரு பார்வையில் தூக்கி
வெளியே வீசி விட்டாய்
உடலுக்குள் மனதிருக்கிறதா
மனதுக்குள் உடலிருக்கிறதா
என்பது கூட புரியவில்லை
சமயத்தில் ஒரு கெழுத்தி மீனைப் போல
அது துள்ளி துள்ளி விளையாடுவதைப் பார்ப்பது
அத்தனை வேடிக்கையாக இருக்கிறது
அன்பென்னும் வெள்ளம்
உடைப்பெடுத்து ஒடும் போது
அதை காதலென்றால் என்ன
நேசம் என்றால் தான் என்ன
அல்லது பிறிதொரு வார்த்தையில்
அழைத்தால் தான் என்ன
அடைக்காமல் இருந்தாலே போதாதா ?
- தங்கேஸ்