1.
எல்லாம் போம்!!
கடைசியாக
கோபித்துக் கொள்வோமே!
அறுதியில்
பேசாமல் கேளாமல் போவோமே!
அந்தத்தில்
பாராமல் கண்ணில்படாமல் ஒளிவோமே!
தீர்ப்பே இறுதியில் தானே
இப்போதே நமை நாமே
ஏன்
தண்டித்துக் கொள்ள வேண்டும்
அன்பே,
அன்பால்
அன்பிற்காக!!!
2.
எனை
விரும்பியே ஆகவேண்டிய
கட்டாயம் இலாத போது
எனை
வெறுத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தமும்
இல்லை தானே அன்பே!
3.
காணாமல் போகவில்லை அறிவிப்பு
தொலைந்து போகும்
வழியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்
வாழ்வதாக
நினைத்துக்கொண்டு!
4.
பிறப்பைப் பற்றி
தெரியாது
இறப்பைப் பற்றி
அறியாது
இருப்பைப் பற்றியும்
புரியாது
தெளிவாக இருக்கின்றன
விலங்குகள்..
5.
கூசச் செய்யும் சூரியனை
பழிவாங்கவெல்லாம்
முடியாது.
வேண்டுமானால்
கண்களை ஒருமுறை
மூடித் திறந்து கொள்ளலாம்!
அது போதும் தானே!
6.
பால் மறக்க
தன் முலைக்காம்புகளில்
காட்டிய
வேப்பெண்ணெயின் கசப்பைத்
தவிர்த்து
வேறெந்த கசப்பையும்
உனக்குக் காட்டாதவள்
உன் வார்த்தைகளின்
கசப்பைத் தவிர்க்க
மட்டும் தானே
உனை வேண்டுகிறாள்.
7.
அளவுக்கு மிஞ்சினால்
காற்றும் நஞ்சு
தீபத்திற்கு.
உன்னுடைய சொற்களும்
என்னுடைய சொற்களும்தான்
சண்டை
போடுகின்றன!
உன்னுடைய மவுனமும்
என்னுடைய மவுனமும்
எப்போதும்
சமாதானமாய்த் தான்
இருக்கின்றன.
9.
உன்னை
ஒளித்து வைப்பதற்காகத் தான்
எழுத ஆரம்பித்தேன்
உடன்
என்னையும்
ஒளித்து வைக்கும்
அளவு இடம்
கிடைக்கிறது அன்பே!
10.
பயமுறுத்துகின்ற
விதமாய்
ஏதும்
நிகழ்வதில்லை,
பயந்த விதமாய்
மட்டுமே
நிகழ்கின்றன!
11.
நம்மிருவரின் வீடுகளும்
ஒருவரோடு ஒருவர்
பேசிக் கொள்ளாவிட்டாலும்
அருகருகே
எப்போதும்
இருக்கின்றன.
நாம்
அருகருகே இருந்தாலும்
எப்போதும்
பேசிக் கொள்வதில்லை!
நம்மைப்
பிரித்து வைத்த
ஒற்றை மதில்சுவர் தான்
இருவீடுகளையும்
எப்போதும்
சேர்த்து
வைக்கிறது!
12.
எலும்பைக் கவ்வியிருக்கும்
நாயால் குரைக்காமல்தான்
போராட முடியும்!
குடும்ப வாழ்வை
வாயில் கவ்வியிருக்கும்
சாமானியனுக்கு
அமைதி மட்டுமே
ஆயுதம்...
- அ.சீனிவாசன்