இந்த பயண நிகழ்வை
பத்திரமாக பதிவாக்க
அநேகம் இருந்தது
சுவாரசியமாக்கும்
வணிகப் படங்களின்
வண்ணக் கலவையாக
யாவருக்கும்.
என் பொருட்டான
பிறரது புரிதல்கள்
வழக்கம்போல
பழகிவிடும்
நெருக்கத்தைக் கொடுத்தது
கரிசன
கட்டுடைப்புகளால் சிலருக்கு.
அகங்காரமற்று
முலாமிடாத பேச்சில்
அந்நியத் தன்னை
மறைந்து விட்டதை
நெருங்காதவர்கள்
வியக்குமாறு அமைந்தது
கிண்டலும் கேலி
கிளர்தலான கூச்சல்களும்
காலக் கணக்குகளை உடைத்து.
வாழ்க்கைப் போக்கில்
நிறுத்தங்கள்
சமீபித்துவிடும்
அவதானிப்பில்
சூழும் ஆசைகள் தான்
ஆசுவாசம் கொள்ளுவதில்லை
எப்பொழுதும் எதார்த்தங்களை
மிகைக்க நினைப்பதால்.
இலக்கு நோக்கிய
இப்பிரிதலின்
கையசைப்பில்தான்
துளிர்க்கிறது கண்ணீர்
நேசப் பொங்கலாக
ஆதுரமேகி.
அடுத்தொன்று
ஆளுமை செய்யும்முன்
எப்பொழுதும் போல
தொக்கி நிற்கிறது
விடையறியாத கேள்வியொன்று
கட்டுத் தளராத
கடின மனம்
கொண்டவர்கள்
நேசிக்கவும்
நேரம் காலம்
பார்ப்பது பற்றியதுதான் அது.
- ரவி அல்லது