வழி தவறி
படுக்கைக்கு வந்து விட்ட
கட்டெறும்புக்கு
அவஸ்தை தாங்கவில்லை
மானுட வாசத்தில்
மயக்க நிலையில்
தத்தளித்தது
பிடித்து வெளியே விடலாம்
என நீட்டிய கையிலும்
நீள் கோடுகள்
வரைந்து குறுகுகின்றது
நிற்க அதற்கு ஒன்றுமில்லை
ஓட்டத்தின் தகிப்பில்
உள்ளத்தின் குறுகுறுப்பு நமக்கு
விட்டால் போதுமென
விறுவிறுப்புக்கு இடையே
சட்டென
காணாமல் போன அதை
அப்படி காணாமலே
விட்டு விட முடியுமா
கண்டு பிடிக்கும் வரை
மூளை மடிப்பில்
ஒளிந்து கொண்டிருக்கும்
சர்க்கரைத் துகள் அல்லவா
நானும்...!
- கவிஜி