கீற்றில் தேட...

நாள் தவறாமல்
யாரோ ஒருவர்
அந்தக் கல்லறையில்
பூக்கள் வைத்துச் செல்கிறார்.
பூக்கள் வைக்காத கல்லறையின்
மேலே தன் காய்ந்த சரகுகளை
உதிரச் செய்கிறது மரம்.

**********

இருண்ட வானில்
நிலவின் ஒளியில்
வானவில்லைப் பார்த்தேன்.
இந்த முறை நட்சத்திரங்களும்
குறைந்து இருந்தன
தன்னை யாருமே பார்ப்பதில்லை
என்பதாலோ என்னவோ
நட்சத்திரங்களும் தூரமாய்
நகர்ந்து விடுகின்றன.

**********

பால் டப்பாவின்
மேல் முடி
பேருந்தின் கூட்ட நெரிசலில்
கழன்று கீழே விழுந்தது.
பேருந்திலிருந்த அனைவருமே
இருக்கையின் முன்பக்க
கம்பியைப் பிடித்திருந்தனர்
அவசரமாய்க் குனிந்து
அவள் அதை எடுக்கையில்
மொத்த மனித நேயமும்
கீழே கொட்டி இருந்தது.

- மு.தனஞ்செழியன்