கீற்றில் தேட...

மழையில் குளித்து
வரும் எருமையென
அடர்க் கருமை நிறம்
பூசிக் கொள்கிறது
மழைக்கால இரவு.
ஆரஞ்சு மிட்டாயை
மொய்த்திடும் எறும்பாக
வளர்பிறை நிலவை
மூடிக் கொண்டது
மழை மேகங்கள்.
அந்தியின் செவ்வண்ணம்
நெஞ்சில் உன் நினைவை
அப்பிச் சிரிக்கிறது.
ஒரு குவளை
லெமன் தேநீர்
பருகுகிறேன்
மிடறுகளில் இறங்கி
உயிரில் மணக்கிறது
தீராத உன் புதினா
முத்தங்களின் நேசம்.
என் குளிர் இரவை
ஒரு குவளை
தேநீராக்கிப் பருகுகிறது
அருகில் நீயற்ற
கார்கால இரவு.

- சதீஷ் குமரன்