கீற்றில் தேட...

வேகமாய் சென்று
சுவர் மறைவில் ஒளிந்ததும்
சட்டெனத் திரும்பி
குறுகுறுவென நோக்கும்
பக்கத்து வீட்டுப் பூனைக்கு
இன்று முதல் உன் பெயர்
மதில் மேல் காதலென
உன் கொலுசொலியில்
அதன் மியாவ் மியாவ்...!

*
கண்ணாடிப் பேழைக்குள்
உனை வைத்திருந்தார்கள்
திறந்து கொண்டு
வந்து விடுவாய் என்றே
கடைசி வரை நம்பியிருந்தேன்
மண்ணுக்குள் வைத்த பிறகும்
அதையே நம்பிய மனம்
அதன் பிறகு
மாயப் பேழைக்குள்

*
இருக்கும் போது
மனிதனாக
மதிக்கப்படாதவனை
இறந்தபிறகு
கடவுளாக்கி விடுகிறது
வீட்டு சட்டம்

*
இயல்பாய் ஒன்று சொல்லப்படும்
அதற்கு அவுலாய்
ஒவ்வொன்றும் மெல்லப்படும்
உளறிக் கொண்டே இருப்பதா
உயிரோடு இருப்பது

*
வழிப்போக்கனுக்கு
ஞானம் தந்தனுப்பும்
வானம் கற்ற மரம்
நின்று சலிக்கும்
தனையே மென்று சிரிக்கும்

*
வாழ்வென்பது
வாழ்க்கைங்கறது
இந்த வாழ்க்கை
அட போங்கப்பா
நிகழ்த்திக்
காட்ட வேண்டிய ஒன்றை
நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

*
ஆயுதம் செலயற்றுப் போனது
ஆட்களும் ஆங்காங்கே
பிரிந்து விட்டிருந்தார்கள்
நிராயுதபாணியாக நிற்கிறேன்
இப்போது வேட்டை
அதுங்களுக்கு

- கவிஜி