இவ்வதிகாலையில்
புத்தகம் தொடும் பழக்கமில்லை
பூரிக்கும் பொழுதினை ரசிப்பதால்.
அரிதென
நடந்த நிகழ்வில்
எடுத்த புத்தகத்தினுள்
இருந்த சின்னஞ்சிறு பூச்சி
வாசிப்பதைத் தடுத்தது,
வார்த்தைகளுக்குள் நகர்ந்து.
'எங்கள் வீட்டிற்கு வந்ததும்
நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள்'
என்ற கல்யாண்ஜியை
மூடிவிட்ட மனம் சொன்னது
வலித்திருக்குமோ அதற்கென.
இன்னொரு முறை
அதைக் கண்டுவிடும்
ஆசைகள் மேவ
எடுத்த புத்தகத்தை
இருந்த இடத்திலே
வைத்து விட்டேன்.
எழுநூற்றி அறுபத்தியாறு பக்கத்தில்
எங்கு தேடுவது
அதை என்பதால்.
எப்பொழுதாவது
அந்த கவிதையைப் படித்தால்
அதனிடம் கேட்க வேண்டும்
என்ன சொன்னது
அந்தப் பூச்சி
என்னைப் பற்றியென.
- ரவி அல்லது