கீற்றில் தேட...

சோசலிஷத் தெளிவின் சிவப்பு
துண்டுகளாக
பந்தலெங்கும்
பாட்டாளிகளின் தோள்களில்
பளபளப்பாகத் தொங்கியது.

அண்ணாயிசமும்
அதன் பிறகான இசங்களும்
வேட்டிகளோரம்
விருப்பக் கரையாக மின்னியது.

இன உணர்வு
இத்தியாதிகள்
இருமாப்போடு
உட்கார்ந்திருந்தது.

இதற்குள்ளான
ஜவ்வாது வாடை
தனி ஆவர்த்தனமாக
நெற்றியில்
அடையாளமிட்டு
அமர்ந்திருந்தது.

ஒலித்த கைபேசிகள்
ஒவ்வொன்றும்
சமீபத்திய வரவாக
தகவல் பரிமாற்றம்
யாவரிடமும்
செயற்கை நுண்ணறிவால்
செம்மையாக நடந்தேறியது.

மூன்றாவது யுத்தத்தை
மூள விடாமல்
அமெரிக்காரன் விடமாட்டானென
நரைத்த கிழங்கள்
நரம்புகள் புடைக்க
விவாதித்தது.

இறந்துபோன
உறவுக்காரருக்கு
இடைவெளி விட்டு
ஒப்பாரிகள்
மரபுக்கடத்தலாக
மாறிடாத ஒன்றாக
பெண்களுக்கிடையில்
கதறலாக கண்ணீரைச்
சிந்த வைத்தது.

இறந்தவரின் இல்லாள்
பணியாளாக இருந்ததைத்தவிர
அப்படியொன்றும்
சுகப்பட்டதான வாழ்க்கையை
இல்லானிடம் எப்பொழுதும்
அனுபவிக்கவில்லை
என்பது யாவரும்
அறிந்துதான் இருந்தார்கள்.

நுழைக்கப்பட்ட
முரண் கூத்துச் சடங்குகள்
யாவும் முடிந்து
சுவரோரம் சணல் சாக்கில்
அழுக்கு சேலையில்
சுருண்டு கிடக்கும்
பெண்ணின் பேரவலத்தை
எப்படி இவர்களால்
கண்டு கொள்ளாமல்
கடக்க முடிகிறது
என்பதுதான் துயரமாக
என்னைத் துரத்திக் கொண்டே
இருக்கிறது.

- ரவி அல்லது