எனது அதிகாலைக் கனவுகளிலிருந்து
என்னை உலுக்கி எழுப்புவதற்கு
சிறைக் கம்பிகளினூடே
அவர் முறுவலிக்கிறார்
அவர் சிரிக்கிறார்
எனது வாழ்நாள் தண்டனைக் கூண்டுக்குள்
ஒரு பெரிய சாவிக் கொத்தின் கிண்கிணிச் சத்தம்
அவரது காலை வாழ்த்துக்கள்
தலையில் அடர்நீல நிறத்தில் நேரு குல்லாய்
மேலிருந்து கீழ்வரை கொடூரமான காக்கி உடுப்புக்கள்
இடுப்பைச் சுற்றிலும் பாம்பு போன்ற கருப்புக் கச்சை
தூக்கக் கலக்கத்தில் எனது பாதி திறந்த கண்களின் முன்பு
நரகத்தின் வாயில்களைக் காக்கும் பிசாசைப் போல
அவர் நிற்கிறார் அங்குமிங்குமாய் நடக்கிறார்
எதிரியின் படையிலிருந்து ஆவியுருவாய் அவர் தெரிகிறார்
ஆனால் இதமான புன்னகையோடும் நட்பான முகத்தோடும்
ஒவ்வொரு நாளும் விடியும் வேளையில்
ஒருவர் உயிருடன் உள்ளாரா இறந்துவிட்டாரா என்று
சோதித்துக்கொண்டு, உயிருள்லவர்களின் தலைகளை
எண்ணுகிறார்
வலியையோ முறைப்பாடோ தெரிவிக்காமல்
ஒவ்வொரு நாளிலும் ஆயிரம் மூறை
இரும்புக் கதவுகளின் பூட்டுக்களை
திறக்கவும் பூட்டவும் செய்கிறார்
தனது சோர்வில்லாச் சேவைக்காக
இனாமோ சலுகையோ எதையும் கேட்பதில்லை
நான் நோயுற்றபோதோ நினைவிழந்த போதோ
வந்துசேராத மறுத்துவரை
தனது கம்பியில்லா அழைப்பானில்
பொறுமையாகத் திரும்பத் திரும்ப அழைக்கிறார்
அவர் தனது சொந்த துயரக் கதைகளை மறைக்கிறார்
குற்றங்களையோ கபடின்மையையொ பொருட்படுத்தாமல்
விலங்குபூட்டப்பட்ட துயர ஆன்மாக்களுக்கு
பொறுமையுடனும் கருணையுடனும்
அவர் செவி சாய்க்கிறார்
அவர் கவனித்துக் கேட்கிறார்
விவாதிக்கிறார்
அதிகாரத்தில் உள்ள தீய சக்திகளை
திட்டிக்கொண்டே கண்டிக்கிறார்
மேலதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கிறபோது
அவரது புருவங்கள் சீற்றத்தில் நெரிக்கின்றன
தனது கழுகுக் கண்களின் வேவுப் பார்வையுடன்
பிசாசு அரசின் இருண்ட நடவடிக்கைகளை
பலமான அடிகளால் மிதித்து நடக்கிறார்
அவர் நமது சமூகத் துயரத்தின் ஆழமிக்க
பள்ளத்திலிருந்து வருகிறார்
வாயில்களுக்கு வெளியே ஏங்கிக்கொண்டிருக்கும்
தனது அன்புச் செல்வங்களைக் காணவும்
அவருக்கு நேரமில்லை
தனது கடமைகளால் சிறைப்படுத்தப்பட்டு
வானுயர்ந்த சுவர்களுக்கும்
மூடப்பட்ட வாயில்களுக்கும் பின்னால்
இரவும் பகலுமாக
வாழ்நாளையெல்லாம் சிறையில் வீணடிக்கிறார்
சொற்ப ஊதியத்துக்காக.
சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் வருகின்றன, போகின்றன
ஆனால் அவர் நிரந்தரச் சிறையாளி
அவருக்கு விடுமுறை நாட்கள் இல்லை
பண்டிகை நாட்களும் இல்லை
வார இறுதிகளும் இல்லை.
அவர் ஒரு துறவி
அவர் ஒரு செவிலியர்
பக்தியும் விடாமுயற்சியும் பொறுமையும் கொண்ட
ஒரு பூசாரியும் கூட.
எனது கூண்டின் கம்பிகளுடன்
பிரிக்கமுடியாமல் முடிவின்றி ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓய்வில்லா அடிமை.
அவர் ஒரு நண்பர், ஒன்றுவிட்ட சகோதரர்
ஒரு தோழர்
எனது வாழ்நாள் தண்டனைக்கு
வாக்கியம், சொற்றொடர்கள், சொற்கள் மற்றும் அசைகளின்
காவலரும் பாதுகாவலரும் அவர் தான்.
(முனைவர் சாய்பாபா அவர்களால் 2017 மே 1 அன்று எழுதப்பட்டது. காரவன் இதழில் வெளிவந்தது)
தமிழில்: நிழல்வண்ணன்