ஒவ்வொரு முறை
கையேந்தும்போதும்
என் வெட்கத்தை
விலையாக்குகிறேன்.
அழுக்கேறிய துணியில்
மூடிய வாளிப்பான
அவல உடம்பைக் கொத்தாமல்
சிலர் சென்றது
நான் செய்த புண்ணியம்.
இடுப்பில் இருக்கும் குழந்தைதான்
உங்கள் கருணையை மீட்குமென
இந்த வாழ்க்கைதான்
எனக்குக் கற்றுக் கொடுத்தது.
வேலை வாங்கித் தருகிறேனென
நீங்கள் வெறுப்பாக
கேட்கும் பொழுதெல்லாம்
நான் கூனிக்கூசி நிற்பதை
நீங்கள் கவனிப்பதே இல்லை.
ஒவ்வொரு முறை
உணவு கொடுக்கும்
உங்கள் முறைமையை
நான் ஏற்றாலும்
எனக்கு இருப்பது
ஒரு வயிறுதான் என்பதை
நீங்கள் மறந்து போனதை
வியக்கிறேன்.
எல்லாவிதமான ஆசைகளுடன்
வளர்ந்த பிள்ளைதான்
கனவொன்று கலையும் முன்
பிள்ளை பெற்று
உங்கள் முன்
கையேந்தி நிற்கிறேன் என்பதை
நீங்கள் அறியப் போவதில்லை.
இப்படியான
அன்றாடத்தில்
ஆசை முளைவிடும் முன்
அந்தி வந்து விடுகிறது.
வேறொன்றை
நினைக்கும் முன்பு
விடியல் வந்து விடுகிறது.
மறுமுறை நீங்கள்
விட்டெறியும்
எதற்காகவும்
நான்
கெஞ்சி நிற்பதுபோல
நீங்கள் கொஞ்சம்
முகம் மலர்ந்து
கொடுக்கலாம்.
நாம் மனிதர்கள்
என்பதை
மறந்து போனதற்காகவாவது.
- ரவி அல்லது