கீற்றில் தேட...

நட்சத்திரப் பூக்களை
நண்பகலிலும்
நடத் தெரிந்தவள்

இமைகளின் வழியே
என் திசை திறக்க
அறிந்தவள்

மாய சோறு சமைப்பாள்
காலை மாலை
மதியம் இல்லை அதற்கு

தேநீர்க் கோப்பையில்
தேகத் துளி கலப்பாள்
நேரம் தவறாது சுவைக்கும்

ஒற்றை மரத்தடியே
ஒரு நூறு பாதங்களில்
அவள் காத்திருப்பு

மொழியற்ற கண்ணீர்
விழி மீறும் போதெல்லாம்
வாட்சப் அணைப்பு

செங்காந்தள் மலரில்
மௌன முத்தத்தை
விசும்புவாள்

மென் காந்த உளறி
மெலிதான யுத்தம்
விரும்புவாள்

மேக தூது சாத்தியம்
மழைத்துளியில்
சீனி காய்ப்பவள்

நீல வானம் சாட்சியம்
எங்கிருந்தும் என் மலையில்
தேனீ மேய்ப்பவள்

- கவிஜி