கீற்றில் தேட...

நேற்றைய நம்பிக்கையில்
மோசடிகளைக் காணும்பொழுது
இன்றும்
நம்பிக் கொண்டுதான்
இருக்கின்றேன்
என் நம்பிக்கை வேறானதென்பதால்...

நானொரு
நம்பிக்கையின் அடிமை.
நீங்கள்
சிதைத்துக் கொண்டே
இருப்பது
என் உருவத்தைத்தான்
என்னையல்ல.

நீங்கள்
நிகழ்த்திக் கொண்டே இருப்பது
அறியாமையின்
இருள் நாடகத்தை
எப்பொழுதும்
யாவரின் கவனம் பெற.

நீங்கள்
வெறுப்பை விதைத்து
வேதனையை
அறுவடை செய்கிறீர்கள்.
நான்
மெய்யை விதைத்து
அறியாமையை
அறுவடை செய்கிறேன்.

என்
உயிர்த்தெழுதலில்
உங்களைக் காண முடியாதுதான்
என்பதை நானும் அறிவேன்.
பகலில் இருள் நாடகங்கள்
அரங்கேறுவதில்லை
ஒத்திகையின் பொருட்டாகக்கூட.

மாதொரு பாதக
மகோன்னத வெறுப்புகளை
விதைத்துக்கொண்டே இருங்கள்
யாவும் பாழாக.

நான் வெகுண்டெழ
இதுவும்
தேவையாகவே இருக்கின்றது.
உலகில் விரவியிருந்த
ஆயிரமாயிரம்
ஆட்டு மந்தைகளுக்கு
ஒரு புரட்சியாளன்தான்
தோன்றினான்
ஒவ்வொரு பொழுதும் என்பதை
நீங்கள் அறிய மறந்ததை
நினைத்து நகைக்கின்றேன்
இப்பொழுதும்.

யாவிற்குமிடையில்
நோவுகிறது தேகம்.
அடப் பாவிகளா...
உயிர்காக்கும் மருந்து
மாத்திரைகளிலுமா..
ஈட்டலின் பொருட்டான
இத்தனைக் கலப்படம்.

- ரவி அல்லது