உறவுகளைக்
கையாளத் தெரியாதவன்
என்கிறார்கள்
உண்மை தான்
சீர் செனத்திக்குப் பதில்
சிறகுகளைப் பொருத்துகிறவனை
வேறு எப்படி சொல்வார்கள்...!
*
அதே நிலவொளியில்
வேறு ஒருவன்
வேறு ஒருத்தி
வேறு வாழ்வு
நிகழ்வதில் எந்த மாற்றமும்
இருந்திருக்காது
மரம் மரமாய்
தொங்கும் இலைகள்
காற்றில்
ஒலித்துக் கொண்டிருக்கும்
யார் இல்லையெனினும்
யாவும் இருக்கும் என்பதை...!
*
சரியான நேரத்தில்
உந்திப் பறந்து விட
தெரியாமல் இல்லை
கம்பிகளின் வழியே நுழைந்து
வெளியேறி விடவும் முடியும்
கூண்டுக்காரனுக்கு
ஒப்புக் கொடுத்த சிறகுகளில்
ஒரு குடும்பம்
தொங்கிக் கொண்டிருப்பதை
அறிந்தே இருக்கிறேன்
*
விஷயம் கேள்விப்பட்டேன் என்று
ஆறுதல் சொல்ல
நான் தடுமாறுகையில்
அவரின் ஆற்றாமை
அற்புதமாய் வெளிப்பட்டது
என்னென்னவோ பேசி
ஏதேதோ நினைவாடி
இறுதி வரை
கேள்விப்பட்டதற்கு
நாங்கள் வரவேயில்லை
ஆறுதல் வேண்டுவோரை
அவர் விருப்பத்துக்கு
பேச விடுவதை விட
ஆறுதல் வேறுண்டோ...!
- கவிஜி