கீற்றில் தேட...

தொல்குடியின்
தோல் போர்த்திய
ஆதார் அட்டையற்ற
வீதி சகோதரனை
அணைத்துக் கொண்டபோது
அவர் கூனி கூசி நின்றார்
யுகங்களாக
எவரும் தழுவாததால்.

எனக்குள் இருக்கும்
உணர்வுகள் போல
உனக்குள்ளும்
இருக்கிறதென்றால்
நீயுமென்
சகோதரனென்றேன்
எங்களின் அங்கவயங்கள்
புறப் போர்வை கடந்து
ஒத்திருந்ததால்.

வாஞ்சையோடு
கை போட்டு
எடுத்த புகைப்படத்தில்
கூனி இருப்பதை
காணச் சகிக்காமல்
இணையத்தில் சேமித்த பிறகு
தொற்றிய கவலைதான்
மாளாத் துயராக்குகிறது
எப்பொழுதும்.

ஆதுரத் தழுவலின்
மீச்சிறு நம்பிக்கை
அவருக்குள்
துளிர்விடும்பொழுது
என் வேரை எவரும்
வெட்டாதிருக்க வேண்டும்
சுதந்திரப் போராட்ட
தியாகிகளுக்கெல்லாம்
சாதி வால்
முளைத்துத் தொங்கும்
சனாதன காலத்தில்.

- ரவி அல்லது