கீற்றில் தேட...

சுய மீட்சியை
ஏற்படுத்தாத
எச்சொல்லும்
என்னை அண்டாதிருக்க
என்ன செய்ய வேண்டும்.
அனுமதியற்று உட்புகும்
காட்சிப்பெட்டிகளை
எழுப்பி விட்டது நான் தான்.
சிரிக்க எத்தனிக்கும் போது
அழ வேண்டியதாக உள்ளது.
அழ வேண்டிய தருணத்தில்
சிரித்துத் தொலைக்க
வேண்டியதாக இருக்கிறது.
யாவையுமொரு நேரிசைக்கு
ஆட்படுத்தி
விழிக்கும் பொழுது
அதன் போக்கில் பயணிக்க
வேறொன்று அழைக்கிறது.
ஒவ்வொரு
இரவிற்குள்ளும்
ஓராயிரம் உறுதிப்பாடுகள்
உறக்கத்திற்கான மிடறுகளின்
உபாயம்தான் எப்போதும்
தேவையாக இருக்கிறது.
கௌதமனுக்கு
வாய்த்த காட்டிற்கு
வீட்டிற்குள் இருக்கும்
கொடுக்குகளுடைய
குளவிகளைத் தவிர
துறப்பதற்கு தேசமொன்றுமில்லை.
முதல் தேதி
முணு முணுப்பைக் கடக்க
பரிதாபமாக
பாதி தேதிகள் கழிகிறது.
இப்படியான அன்றாடங்களுக்குள்
சிக்கிய என்னைத்தான்
பொறுப்பான பொதி சுமப்பவன்
என்கிறீர்கள்
என் மேல் எவ்விரக்கமற்று.

- ரவி அல்லது