கீற்றில் தேட...

மாடிக்குச் செல்ல
லிப்டுக்கு காத்திருக்கும்
நேரத்தில்
எங்களுக்குள்
முன் அறிமுகம்
இருந்த பொழுதும்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு முறை
மருத்துவரை
சந்திக்க பதிவுச் சீட்டு
வாங்கும் பொழுதும்
அவர் சிரிக்கவுமில்லை
நான் வருந்தவுமில்லை.

வாய்த்திருக்கும்
இந்த அணுக்கப் பயணத்தில்
இருவர் மட்டுமே
லிப்டிற்குள் இருந்தது
அவருக்கு அசாதாரணமாக உள்ளதை
கணக்கு நோட்டுகளை
பற்றிய படி
பார்வையை மாத்திரம்
திசை மாற்றி இருந்ததை வைத்து
அறிய முடிந்தது.

எண்கள் அழிந்திருந்த பொத்தான்களில்
நான் போகுமிடத்திற்கு
அவர்தான்
வழி செய்ய
வேண்டியதாக இருந்தது.
வந்த இடம்
எனக்கானதுதானா என்பதை
நான் அவரிடம் தான்
கேட்க வேண்டியதாக இருந்தது.

சூழ்ந்த மௌனத்தின் பொருட்டால்
இரண்டு மனித இயந்திரங்கள்
பயணித்ததாக
சொல்லிவிட முடியாது.

எனக்குள் ஏற்பட்ட
அவரைப் பற்றிய
அக்கறையான
கவலைகள் போல
என்னைப் பற்றியும்
அவருக்குள் எதுவும்
தோன்றி இருக்கலாம்.

குறைந்தபட்சம்
தெரிந்த மருத்துவமனையில்
தெரியாதவரைப்போல
வழி கேட்டு நடிக்கும்
வடிவான கள்ளனெனவும்
நினைத்திருக்கலாம்.

யாவரையும் நெருங்கி விடும்
குணமுடைய நான்
வினாடி நேரத்தில்
வாஞ்சயுடைய எனதன்பின்
வார்த்தையொன்றை
உதிர்த்து பரிவுடைய பாதுகாவலன்
நானென பாசங்கொண்டு
பழக வைத்திருக்கலாம்தான்.

இங்கு ஆண்கள்
அத்தனை நல்லவர்களாக இல்லாதபோது
நேசத்தில் நெகிழ வைத்து
தரித்த கேடயத்தை
பரிசாக வாங்கி
பாவம் அந்தப் பிள்ளையிடம்
நான் என்னதான்
செய்துவிடப் போகிறேன்.

நரம்பில் மருந்து செலுத்தியதற்கு
கீழே வந்து பணம் கட்டியபோது
வயதான கிழவன்
நாகரீக வார்த்தையின்
சாதுர்ய சரசத்தில்
தகவல் கேட்டுக் கொண்டிருந்தான்.
மனித இயந்திரம்
கணினியின் உதவியோடு
தன் வேலையை செய்துகொண்டே
தகவல் சொல்லிக் கொண்டிருந்தது.

- ரவி அல்லது