கீற்றில் தேட...

அறியாமைக் கதைகளில்
தழைத்திருந்த
கனிம மெய்களுக்கு
கவசங்களாக
களவாடாத கட்டுப்பாட்டில்
மனிதர்கள் வாழ்வதற்கு
மண் வளம் இருந்தது.

கல்லோடு காலம் தள்ளுமாறு
வர்ணப் பொய்களில்
நூல் தரித்த ஊசிகள்
கிழித்துத் தைத்து
பாழாக்கி பழையதென
உழைப்பைச் சுரண்டி
உண்டு கொழுத்தது.

ஆதி வேர்
அறியாத மரங்கள்
விறகிற்காக
வீழ்கிறோமென
சுயமறியாமல் வாழ்ந்தது.

பழுப்பேறிய காகிதத்தை வைத்து
ஓநாய்கள் பதம் பார்த்தது.
விதியென உயிர் வாழ
உணவு கிடைத்தாலே
போதுமென்று
ஒவ்வொன்றும்
நித்ய வசனங்களில்
மெய் மறந்தது.

பூகோளப் பொய்களில்
கொழுத்தவைகள்
வெள்ளைக்கொடியின்
விசக் காற்றில்
கோடுகளின்
கோளாறுகளை
நிகழ்த்திய வண்ணமிருந்தது.

மரபணுக்களில்
மாறி மாறி
மடிந்தவைகளில்
முளைவிடுமொன்று
வீறு கொண்டு வீழ்த்துமென
காற்று வீசுகிறது.
விடியுமொரு நாளுக்காக
வரவை எதிர்பார்த்து
குளிர்மையாகவும் கொஞ்சம்
அனலாகவும் எப்பொழுதும்.

- ரவி அல்லது

பி.கு: பூச்சாண்டி+பெருச்சாளி = பூச்சாருச்சாளி