கீற்றில் தேட...

ஆழ்ந்த அமைதி
பெரும் யோசனை
வெகு நேரம் அப்படியே
சரி என எழுந்து
கிளம்புகையில்
நான் மரமாகி நின்றேன்
மரம் நானாக நடந்தது

*
நானொரு கூழாங்கல் பொறுக்கி
அவளொரு இலை பொறுக்கி
நீல நதிக்கரையோரம்
எதிர்ப்படும் விழிகளில்
எப்போதாவது விழுவதை
காலங்காலமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
இந்த இலையுதிர் காலம்

*
நேற்று மறந்து விட்டது
நாளை நினைவில் இருக்குமா
தெரிந்தும் தெரியாத இருத்தலில்
இதோ இந்த கணம்
சுழன்று கொண்டிருக்கிறது
நடுவானில் நின்று
பூமியைச் சுற்றி விடுவது
நன்றாக இருக்கிறது
நம்பிக்கையாய் இருக்கிறது

- கவிஜி