தீக்குளிக்கும்
தேவைகள்
ஏற்படவே
இல்லை,
வாக்கு எந்திரங்கள்
இராமனிடமே
இருந்து விட்டதால்.

***

அழகு நேர்தியிலொரு அறக்கூத்து

இங்கு
யாவும் இருக்கின்றது
பன்முகத்தன்மையில்
பவுசுகள் கூடி.
புல்டோசர் இருக்கின்றது
கட்டுமானத்துக்கு மட்டும்
பயன்படுத்தப்படாமல்.
வங்கிகள் இருக்கின்றது
பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும்
பயன்படுத்தப்படாமல்.
நீதிமன்றங்கள்
இருக்கின்றது
நீதியை மட்டும்
சொல்லாமல்.
தேர்தல் ஆணையம் இருக்கின்றது.
தேர்தலை மட்டும்
நடத்தாமல்.
எங்களுக்கொரு
பிரதமரும் இருக்கின்றார்.
அவர் எங்களுக்கு
பிரதமராக இல்லாமல்.
நாங்களும் இருக்கின்றோம்.
நாங்களாக இல்லாமல்.

- ரவி அல்லது

Pin It