விளைந்திருக்கும் நன்மையென
கடந்துவிட முடியவில்லை
சிந்தனையில் சிக்கித்
தவிக்காமல் இப்பொழுதும்.

பிளந்து கிடக்கும்
வீதியோர வாய்க்கால்
வடிதண்ணீர் கழிவுகளுக்கு
வரமென நினைக்க வேண்டியதாக உள்ளது
அவதிகளிலும்
அக்கம்பக்க சண்டைகளிலும்
காலம் தள்ளியதால்.

முன்பொரு முறை
தேர்வெழுதி திறமையில்
வேலை பார்க்கும்
பொறியாளர் வந்து போனார்
வாங்கும் சம்பளத்திற்கு
கடமைகள் செய்து.

அவ்வப்பொழுது
அலுவலர்கள் வந்தார்கள் அளந்தார்கள்
ஒப்பந்தக்காரர்
ஓடியாடி வேலையாட்களை
ஒழுங்கில் வேலைகள் செய்ய
நிர்பந்திக்குமாறு.

பிறகொரு நாள்
சிலர் வந்தார்
மட்டம் பார்த்து
வண்ண மையில்
சுவரெங்கும் அடையாளத்தில்
ஏற்ற இறக்க
குறிகளைத் துல்லியமாக
வாட்டம் பார்க்கும் வைபமென
நிகழ்த்திவிட்டுச் செல்வதற்கு.

கச்சிதமாக வந்து போனார்
கவுன்சிலர்
முகப் பதிவை முன்னிறுத்த
இன்னொரு முறை
இந்தியாவின் எழுபத்தி நாலாவது
சட்டத்தின் உட்பிரிவில் மீண்டுமொரு
திருத்தத்தைக் கொண்டுவரும்
எண்ணத்தை அவ்வப்பொழுது
எழ வைக்க.

பள்ளிக் குழந்தைகளும்
பாரம் ஏற்றி வரும்
வண்டிகளும்
வாகன வியாபாரிகளும்
வயதானவர்களும்
நன்மையொன்று நடப்பதற்காய்
சிரமங்களைப் பொறுத்தார்கள்
நாளும் பொழுதும்.

சர்வ நிச்சயமாக
சகல வேலைகளும்
அடுத்தடுத்து அரங்கேறியது
வினோத சத்தங்களில்
வீதிகளெங்கும் அதிருமாறு
நீதிச் சட்டங்களை
நினைக்க வைத்து.

இப்படியாக
கடந்த நாளில்
கடுப்பான கடைசி வீட்டு மாமா
கழிவுத் தண்ணீரைத்
திறந்து விட்டார்
ஆறு போல
தண்ணீர் ஓடாமல்
அப்படி நின்று
யாவரும் அதிருமாறு.

தேர்தல் வந்து தொலைத்ததனால்
தேட முடியாமல்
ஒளிந்து கொண்ட
கடவுள்களை நினைத்து
தெருவார்கள் நொந்தார்கள்
திகைத்து நிற்குமாறு.

ஆரம்பம் முதல்
நடக்கும் அத்தனை
அநியாயங்களையும் பார்த்த நான்
தேர்ந்த பொறியாளனும்
'வம்பு தும்புக்குப் போகாத நல்ல மனுசன்' என்று
இவர்கள் கொடுத்த பட்டத்துக்கு
சொந்தக்காரனும் என்பதை
நீங்கள் அறியத்தான் வேண்டும்.

ஓடாத வாய்க்கால் தண்ணீருக்காக
உருவாகிடாது
ஒரு போதும் புரட்சி
ஏனென்றால் வந்துபோன
யாவரும்
ஏதோவொரு வகையில்
இங்கு ஒவ்வொருவருக்கும்
தெரிந்தவர்கள் மட்டுமல்ல
எங்களுக்கு கொஞ்சம்
வேலையும் இருப்பதனால்.

- ரவி அல்லது

Pin It