மரணம்
நிகழ்ந்த வீட்டில்
முதல் சிரிப்பு யாருடையது

*
சுவற்றுக் கற்பனையோ
கோட்டோவியத்தில்
மறுநாள் துளிர் விட்ட செடி

*
கிளையில் அசையும்
காற்றைக் கவனி
காதலில் இருக்கிறது

*
விளை நிலம் விலை நிலமானது
நீரின்றியும் மலர்கின்றன
ஜேசிபிகள்

*
மனிதனின் மலிவான
மகத்துவம்
கோபம்

*
பொய் தானாக நகராது
உண்மையும் பிடித்திழுக்கும்
அரூபத் தேர் அது

*
எந்த மழைக்கும்
கருப்புக் குடை காட்டுவதில்லை
காளான் கூட்டம்

*
கழுகுக்குத் தப்பிய மீனை
அவசரமாய்த்
தழுவிக் கொள்கிறது கடல்

*
பின்னிரவு சாலை
மூட்டை சுமந்த முதுகு
மூச்சு மறந்து உறங்குகிறது

*
முறுக்கிக் கொண்டு திரிவதெல்லாம்
உடைந்து விடும்
முறுக்கைப் பார்

- கவிஜி

Pin It