எங்கே செல்கிறீர்கள்
ஏன் இந்த அவசரம்
எதற்கு இத்தனை நெரிசல்
ஒலிப்பான்கள் சிதற
திசைகள் நிரப்புவது எதற்காக
பதட்டமும் பரபரப்பும் எதை நோக்கி
சாலை நிரப்பி
கோயில் குவிவது எதற்கு
வேர்த்து பூத்த ஒப்பனைகளோடு
இவ்வளவு சீக்கிரம் எழுந்து
அப்படி என்ன திட்டம்
மாற்றி மாற்றி சரி என்கிறீர்கள்
மாற்றுக் கருத்தில் வெற்றி சூடுகிறீர்கள்
கருத்து கழுத்து நெறிப்பதை
உணர்வீர்களா
வீடு சுத்தம் வாசல் சுத்தம்
ஏன் இப்படி ஒரு நிதானம் இழப்பு
டிவிக்குள் ஏன் இத்தனை திரைகள்
திறன்பேசி திணறுகிறது
புரியவில்லையா
விருந்தாளி வருகை
சமையலறை கசகசப்பு
எதை சமன்படுத்த
அருவிக்கு படையெடுத்தல்
மலைக்கு முண்டியடித்தல்
என்ன தரிசனத்திற்கு
என்னதான் வேண்டும் உங்களுக்கு
மூச்சு வாங்க ஏன் சிரிப்பை
பூச்சுகிறீர்கள்
பேசிக்கொண்டே அதையும் இதையும்
ஏன் உருட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்
ஒரு லீவு நாளில்
ஜன்னல் திறந்து வைத்து
சும்மா உட்காருங்களேன்
என்ன இப்போ....!

- கவிஜி

Pin It