பெயரும் அந்நியமல்ல
வயதும் அருகாமை தான்
கன்னத்து மச்சமும்
கடைசியாக அணிந்திருந்த ஆடையும்
என எல்லாம் பழக்கம் தான்
மெல்லிய தேகம்
நெற்றி மேல் சிறு தழும்பு
என்பது கூட பொதுவான அடையாளமே
சொல்லொணா இருத்தலின்
அவசர கால வெளியேற்றம்
அந்த தலை மறைவு
உலகை சுழல விட்டு
ஓரத்தில் நின்று கவனிக்கிறது
உள்ளொடுங்கிய கண்களின் நிகழ்
சுவர் கண்ட இடமெல்லாம்
கருப்பு வெள்ளை சிலுவையை
சுமந்து நிற்கும்
காணவில்லை புகைப்படம்
ஒரு சாக்கு தான்
மற்றபடி
காணாமல் போனதில்
கிடைத்திருக்கலாம் தொலைந்தவர்

- கவிஜி

Pin It