விரல் ரேகை
முகக்குறியீடு
ஒலிக்குறிப்பு
கடவுச்சொல்
வரைத்துணுக்கு

உள்நுழைந்திடும் வழிகளில்
தொங்குகின்ற பூட்டுகளில்
பிரயத்தனப்பட முடிகிறது

வெளியேற இயலாமையில்
தவிக்கச்செய்கிற சாவியைத்தான்
கண்டறியமுடிவதில்லை!

 ***

அன்பின் அழைப்பு

தகிக்கும் வெயிலில்
செம்மண் பிசைந்த
கையோடு சூளையில் தாய்

வானளாவிய கட்டிடத்தின்
குளிரறையில் மென்பொருள்
மகள்

சுடு செங்கலின்
மீதிருந்த கைப்பேசியில்
மகளது அழைப்பு வர

தொட்டழுத்தவியலா
நிலையில் கையைப்
பிசையும் தாய்

உறைபனியாய்
உருகி வழிகிறது
ஓர் அன்பின் அழைப்பு!

- ரகுநாத்.வ

Pin It