ஊருக்கு வெளியே
வரிசை கட்டி நிற்கும்
நெடும் பனைகளென
புறத்தே கிடக்கும்
எங்கள் ஊரைச் சுற்றிலும்
உண்டு இரவும்பகலும் உறங்காது
விழித்திருக்கும்
வட்டச்சாலைகள்
அரைவட்டச் சாலைகள்
சுற்றுச்சாலைகள்
நிலமிழந்து குடியிழந்து
வருவோர்களை அணைத்துக்கொளும்
மேம்பாலங்கள் கீழ் குடியிருப்புகள்,
இதயத்தை இரண்டாகக் கிழித்து
தைத்த அறுவை சிகிச்சைத் தழும்பாக
வயல்கள் குளங்கள் ஏரிகள்
நடுவே பாயும் புறவழிச்சாலைகள்
பகட்டுக் காட்டி பல்லிளிக்கின்றது.
இன்னும் கிடப்பிலும் திட்டத்திலும்
உண்டு ஏராளம் சாலைகள்
இருந்தும்
முழங்காலளவு
இடுப்பளவு, கழுத்தளவு
ஆற்றில் இறங்கி
துர்சாதியப் பிணம் சுமந்தே எரித்திட
சுடுகாடு தேடி அலைகிறோம்.
பிறவிப் பெருங்கடல் கடப்பதே
உங்களுக்கு இலக்கு
கொடும் இழிவுகளைக் கடப்பதே
எங்களின் நாய்ப் பிழைப்பு.
மலைமேல் திகுதிகுவென எரியும்
பெருநெருப்பு
ஊர் நடுவே உயிர்நடுவே அடிவயிற்றில் எரிவதை
நீயும் அறிவாய்தானே
பராபரமே.

- சதீஷ் குமரன்

Pin It