கொட்டோ கொட்டென
கொட்டும் வெயில்
குளம் நிறைந்த குளுமைக்கு
அலைவதை அறிக

ரோடெல்லாம் உடல் இரைக்கத்
திரிகிறது
எட்டு கோடி சூரியப் பூச்சியின்
முதுகு சொரியும் அரிப்பு

உடல் எனும் சிறு கூடு
ஊர்ந்து உரிந்து அயர்ந்து
வேர்த்து பூத்து உணர்வது
வெப்ப சீக்கு

வாசல் வீதி என
வரும் போகும் வினையென
கொப்புளம் பூக்கும் வெயிலுக்கு
வெக்கை இலவசம்

மரம் தேடி மதியம் கதறுவதை
ஊரெல்லாம்
நெற்றி சுருக்கி காணட்டும்
வெயில் விதியிது

தலை தெறிக்க ஓடினாலும்
தவழ்ந்து வந்து சாத்து சாத்தென
சாத்தும் வெயிலுக்குள் இருப்பது
சுயநலத்தின் வழியே
நாம் வளர்த்த சாத்தான்

- கவிஜி

Pin It