நேஷனல்
பேருந்தில் நானும் சிலரும்
ஒரு சிலர்
சிரித்த முகத்தோடு
குழந்தையாய்
ஒரு சிலர்
அழுத முகத்தோடு
அப்பாவாய்
ஒரு சிலர்
வீட்டின் முகவரியை
தொலைத்தபடி
ஒரு சிலர்
சென்னை முகவரியை
தேடியபடி
இதில் சிலர்
அவர்கள் அவர்களாவே
இல்லை
நான் இருந்தும்
இல்லாமலும்
தென்றலோடு பேசியபடி
வந்து கொண்டிருந்தேன்

இருக்கைகளில் சாய்ந்து
நினைவுகளை நேர்படுத்தி
கண்ணீர்ப் பிரதியை
கைகளில் கசக்கிக்கொண்டு
கிழிந்த நகலாய்
காற்றோடு பறந்து கொண்டிருந்தது
என் இதயம்

இதில்
எண்ணிலடங்கா துன்பங்கள்
வீட்டின் கதவை
ஓங்கித் தட்டுவதுபோல்
சத்தமிட்டு
தனக்குள் தானாகவே
யாருமற்ற இருளாய்
நெடுஞ்சாலையில் பயணிக்கிறது

இந்த இரவில்
இருண்ட வானத்தை
பேருந்தின்
பின்பக்கம் கட்டியிழுத்து
கூடவே கூட்டிவருவதாய்
இருக்கிறது
இந்த ஜன்னல் வழி
பயணம்

வானத்தின்
குழந்தையாய் இருக்கின்ற
மேகங்கள்
தவழ்ந்தும் தவழாமலும்
மடியில் வந்து
அமர்வதாய் ஓர் உணர்வு

சாரலின்
ஈரக்காற்று
தேகங்களை கொஞ்சியும்
கொஞ்சாமலும்
சிறு புன்னகையோடு
நகர்கிறது

திடீரென்று
வந்த மின்னல்
வானத்தின் வரைப்பட
கோடாய் மாறி
நட்சத்திரங்கள் செல்ல
வழிகாட்டுகிறது

பேருந்து
சிறு தேநீர்க் கடையில்
நின்றது
தேநீர் குடுவைக்குள்
விழுந்த மழைத்துளி
ஒரு நீள(ல) முத்தம்
வைத்து கலந்தது

ஒவ்வொரு
ஊராய் கடந்து வந்தோம்
மெல்ல பொழுது
விடிய விடிய
நெடுஞ்சாலையில் தேங்கிய
தண்ணீரில்
பேருந்தின் சக்கரம்
முகம் கழுவி
விழித்தெழுந்தது

சென்னை
அண்ணா சாலை என்று
நடத்துனர் கத்தினார்
அண்ணா
இதுதான் என்சாலை
என்று இறங்கியதோடு
என்மீது ஏறிக்கொண்டது
பயணத்தின் நினைவுகள்...

- பாக்கி

Pin It