ஒரு கவிஞனின் கையிலிருக்கும்
பூங்கொத்துகளை கவனித்திருக்கிறீர்களா
ஒவ்வொன்றிற்குள்ளும்
ஒரு கவிதையை
ஒளித்து வைத்திருக்கிறான்
ஒரு நினைவை
புதைத்து வைத்திருக்கிறான்
இரவல் கவிதை கேட்கையில்
ஒரு பூவிலிருந்து
ஒற்றை இதழை வலிக்காமல்
கொய்து பறக்க விடுகிறான்
வலிக்காமல் கொய்வதில் உள்ள வலி
அவன் விரும்பி ஏற்றதாகையால்
நீங்கள் அதற்காக வருந்துவதை விடுத்து
பாய்ந்து பிடிக்கையில்
உங்கள் கையில் இதழோடு
கொஞ்சம் காற்றும் இருக்கும்
நீங்கள் அதை பத்திரப்படுத்துவதிலும்
சிரமம் இருக்கப் போவதில்லை
உங்களுக்கான யாதொரு கடினமுமின்றி
இதழில் அவன் பெயர் போலவே
காற்றில் உங்கள் பெயர்.

- ந.சிவநேசன்

Pin It