கீற்றில் தேட...

தூரத்து பட்டாம் பூச்சிகள்
காற்றில் கதகளி செய்ய
வெளி நுழைந்து உள் வரும்
வண்டு நெற்றியில்
துளி வனம் நகர்கிறது
நகர்ந்து நீளும் மரக்கிளையில்
மீசை நீட்டும் புலி இனம்
இசைத்த பறவைகளுக்கு
இனித்த இலையறைகள்
மரப்பொந்தில் மெத்தையிருக்கிறது
அதில் சத்தமில்லாத இரவு
கொத்துமிருக்கிறது
கரடிக்கு கடிவாளம் இல்லை
கணுக்கால் அசைய
நடைகூடும் புது தாளம் அது
இலை நடுவே
இசை வடிவம் தான் வெளிச்சம்
செடி கொடியெல்லாம்
மீசை தாடி காடு தவம்
காடளக்கும் வானத்தில்
தலைகீழ் தோகை இருக்கிறது
காடு கொண்ட ஞானத்தில்
ராத்திரியிலும் பகல் முளைக்கிறது...!

- கவிஜி