இரவைக் கழுவி
பனிதூவிய அந்த
அதிகாலைக்குத் தெரியாது
அந்த சந்திப்பின் கதகதப்பு
அவ்வளவு சுகந்தமாய் இருக்குமென...

நுனிகொய்து
காய்ந்த பாலிதீன்
சரமேறிய அந்த
தேயிலை அறிந்திருக்காது
அந்த கோப்பைகளில்
வடியும் நேசத்தின் திறவுகோலை...

களம் காய்ந்து
ஆலை நெய்து
உளுந்துடன் உறவாடி
ஆவியடங்கிய அந்த
காலைச் சிற்றுண்டியும் கண்டிருக்காது
இதழொழுகியவை
எல்லாம் இதமானதாய்
இருக்குமென்று...

யாருமறியா நேரம்
நட்பில் நனைந்த
சொற்கள் மட்டும்
நிமிடங்களை நகர்த்தியது
அற்புத கணங்களென...

எதிர் இருக்கைகள் எத்தனையோ
நிரம்பியிருந்தாலும்
அங்கெலாம் நிரம்பியிருந்தது
இருக்கைகள் மட்டுமே...

எங்களுக்கு மட்டும்தான்
நிரம்பியிருந்தது
இதயங்கள்.

- கார்த்திகா

Pin It