கனத்துத் திரண்ட
இருட்டுக் கொட்டடியில்
சிதறிக் கிடந்த
சோகங்களைப்
புரட்டிப் புரட்டிச்
சலித்தன
என் கைகள்

தூக்கமற்ற இரவுகளில்
விழிமூடி விழிதிறந்து
இருட்டுச் சுவற்றில்
கிறுக்கிக் கிறுக்கிக்
களைத்தன
என் விழிகள்

அந்தகாரத் தனிமையில்
தடங்கள் அற்ற பாதைகளில்
இலக்கற்றுத்
திரிந்துத் திரிந்துச்
சோர்ந்தன
என் கால்கள்

வெறுமைக் குழிக்குள்
தலைக்குப்புற
நான்
வீழ்ந்து பதறும்வேளையில்
வாய் பிளந்து
கைகொட்டிச் சிரித்து
வேடிக்கை பார்க்கும்
என் கடந்த காலங்கள்

- முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி

Pin It