அந்திரத்தில் பறந்த
திசை அறியாத
பறவையொன்று
மண் பார்த்து
மரம் பார்த்து
கீழ் இறங்கியாயிற்று
கிட் கிட் இறகசைவில்
இளைப்பாறியது மரம்
கீச் கீச் அலகு இசையில்
மேகம் தொட்டு
புன்னகைத்தது கிளை
மர நிழலில்
ஒரு பறவையின் காணல்
என்னை இளைப்பாறி
பறக்கச் செய்தது.

***

அவ்வப்பொழுது
கரைகளில்
மணல் வீடு கட்டி
விளையாடிச் செல்கிறது
குழந்தை
அந்த மணல்
வீட்டிற்குள் நுழைய
இன்று வரை
கடலை அழைத்து
வருகிறது அலை.

***

கருமேகங்களைக் காட்டி
மழையை வரைந்துவிட்டேன்
சூரியனைக் காட்டி
வெப்பத்தை
வரைய முடியவில்லை
என்னால்...
பறவையைக் காட்டி
இறகினை வரைந்துவிட்டேன்
இறகினை காட்டி
பறத்தலையும் வரைந்துவிட்டேன்
காற்றை வரைய முடியவில்லை
என்னால்...
கடலைக்காட்டி
நீரை வரைந்துவிட்டேன்
கடலின் சுவையை
வரையமுடியவில்லை
என்னால்...
ஈரத்தை வரைய
நம்மால் முடியும்
என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

***

நேசம்
−−−−−−
கரடி பொம்மையை
அணைத்துக் கொண்டே தூங்கும்
குழந்தைக்கு
முத்தமிட்டாள் அம்மா
தூக்கத்தில்
கரடி பொம்மையை
முத்தமிட்டது குழந்தை
முத்தமிட்டவாறே
குழந்தை சொல்லியது
நீ என் கூட
விளையாடு டெடி
நான் உனக்கு
அம்மா என்றது!
கரடி பொம்மையை
நகர்த்திவிட்டு
குழந்தையின் மீது
தன் கைகளால்
அணைத்தவாறே
கண்ணீரோடு முத்தமிட்டாள்
அம்மா.

***

விருந்தினர்கள்
இங்கு வருகையில்
அவர்கள் கூடவே
அவர்கள் ஊரையும்
அழைத்து வந்துவிட்டார்கள்
ஆம்
அவர்கள் வசிக்கும் தெருவைப் பற்றிய கதைகள்
இன்று பெய்த மழையைப் பற்றிய
கதைகள்
அவர்கள் செல்லும் கோவிலைப் பற்றிய கதைகள்
அவர்கள் சார்ந்த வயல்வெளிகளின்
குரல்கள்
சில மனிதர்களைப் பற்றிய கதைகள்
என அவர்கள் ஊரையே கொண்டு வந்தார்கள் இங்கு
இங்கிருந்து
அவர்கள் மட்டும் புறப்பட்டார்கள்.

***

அறைக்குள்
ஒரு பறவையை
வரையச் சொன்னீர்கள்
எனக்குப் பிடித்திருந்தது
உங்களால்
ஒரு மரத்தை வரைந்தேன்
அதுவும் பிடித்திருந்தது
புரியாத பிரபஞ்சத்தைக்
கறுப்பு நிற தூரிகையால்
வரைந்து ரசித்தேன்
நீங்களும் ரசித்தீர்கள்
வரைந்தவற்றுக்கு உயிர்கொடுக்க
வெளியே விட வேண்டாமா நீங்கள்
நீங்களும் வெளியே வரவே
வரைந்து வரைந்து
களைத்துப்போனேன்
ஒரு பூ மலர்ந்தும்
உங்கள் விரல் படவில்லை அதன்மேல்
வெளிவந்து
பிரபஞ்ச வெளியில்
ஒரு பறவையைக் காணல்
காற்றோடு
ஒரு மரத்தைக் காணல்
மலர்ந்து விரியும் கண்களால்
ஒரு பூவைக்காணல்
மேல் நோக்கி நிலவையும்
நட்சத்திரங்களையும் காணல்
என இருக்க வேண்டாமா
இவையெல்லாம் இல்லாமல்
தீர்ந்துவிடுமா என்ன நம் வாழ்வு.

***

பாறை அருவமான கதை
−−−−−−−−−−−−−−−−−−−−−−
வான் நோக்கிக் குவிந்த
பாறையொன்று
கைப்பட்டு நகர்ந்து எழுந்தது
அடிக்கடி அமரும் பாறையும்
அசைந்தது
விரல் தேய்ந்தும் பாத சுவடு
பதியாத பாறையொன்று
சிரித்தது
தேசாந்திரியாகப் பயணம் செய்தது
பலிபீடம் கண்டது தூரத்துப் பாறையொன்று
ரத்தம் சிந்தாத உருவம் பெற்று
குளித்து அமர்ந்து
உணவைத் தொடாமல்
வியர்த்தது
கண் திறந்து ஆடையணிந்தது
அசையாத பாறையொன்று
இன்னும் உளி வலி தீராத ஏக்கத்தோடு
மனிதர்களைப் பார்த்து
மனதில் அமர்ந்து
வீடு வந்தது அந்தப்பாறை
அது பாறை அல்ல இப்பொழுது.

***

செடி நடக் குழிபறிக்கும்
நகக் கண் ஏறிய
மண்ணுக்கு வேரின் வாசம்
மண் சுவரின் காத்திருப்பில்
மரம் கட்ட பிறந்திருந்தது விதை
பச்சை மேகமாய் மலர்ந்து
விதை விரிப்பில்
தரையிறங்கியது வேர்
அந்தரத்தில்
உதிரும் ஒரு இலையைப் பார்த்து
பரிதவிக்கிறது வெளி
புவி ஈர்ப்பு முழுவதும்
இலைகளின் வாசம்
பூமி முழுவதும் எங்காவது
பிறந்து கொண்டே இருக்கிறது
இருத்தலின் நேசம்.

***

குங்குமம்
−−−−−−−−−−
அழகு நிலவின் சாயலில்
நிமிர்ந்து நடக்கும்
ஷாம்பவியே
நெற்றிக்கண் பிறந்த இடத்தில் தான்
மற்றொரு பிறை நிலவைப் பூக்கச் செய்தாய்
அந்த வெளிச்சத்தின் அழகில் தான்
ஆயிரம் நடனங்கள்
பிறக்கிறது
அந்த சிவந்த நிலவு
உதிர்ந்து பிறந்த நிர்வாணத்தில்
எரிந்து போக நக்கீரன் அல்ல நான்
உன் அகத்திலிருந்து பார்க்கும்
என்னை நீ எரிப்பது கடினம்
நீ கண்ணாடியின் முன் நின்றால்
எரிந்து போகும் உன் பிம்பங்கள்
இப்பொழுது நெற்றிக்கண்ணை
உனக்கும் பாதி தந்ததின் விளைவு
புரிகிறது
உன் குங்குமம் அநீதியால்
களையிழந்தால்
மூன்றாவது கண்ணைத் திறந்துவிடு
அதற்காகவே உனக்குப் பாதி தரப்பட்டுள்ளது
நெற்றிக்கண் நக்கீரனை மட்டும்
எரிக்க அல்ல.

***

அள்ள அள்ளத் தீராத
கடல் நீரை
பருகமுடிவதில்லை
பார்க்கப் பார்க்கத் தீராத
வானத்தை
தொடமுடிவதில்லை
இரண்டையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் போதும்
கண்கள் நிரம்பி
வழிந்து
தொலைந்துபோகிறது
இந்த வாழ்வு.

- ப.தனஞ்ஜெயன்

Pin It