ஒருவன் எத்தனை பேரின்
வாழ்க்கை மலர வேராக இருந்தான்?

ஒருவன் வாழ்க்கையின் ஏன்
ஒற்றைப் பூக்கள் கூட மலராமல் போனது?

ஒருவன் எத்தனை துரோகங்களை
புன்னகையால் வென்றான்?

ஒருவன் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டு
புறக்கணிக்கப்பட்டான்?

ஒருவன் சின்ன சின்ன வாய்ப்புகளை
எப்படி தனதாக்கிக் கொண்டான்?

ஒருவன் எத்தனை பேரின் அன்புக்கு
தகுதியானவனாக இருந்தான்?

ஒருவன் ஒற்றை அன்புக்கு
எப்படி ஏங்கித் திரிந்தான்?

ஒருவன் தன் கனவுகளுக்காக
எத்தனை இழப்புகளைத் தாங்கியிருக்கிறான்?

ஒருவன் எத்தனை பேரின்
இதயத்தில் புன்னகைக்கு ஒளிவீசக் காரணியாக இருந்தான்?

ஒருவன் தன் பயணங்களின் தடைகளை
எப்படி படிகளாக மாற்றிக் கொண்டான்?

ஒருவன் முன்னேறிவிடாமல் எப்படியெல்லாம்
சமூகம் அவனை புறந்தள்ளியது?

ஒருவன் தன் கலை ஆற்றலால்
எத்தனை பேரை மகிழ்வித்தான்?

ஒருவன் எப்படியெல்லாம்
ஆளுமையாக எப்படி உருவெடுத்தான்?

இவ்வளவு செய்திருக்கிறானா?
இதெல்லாம் செய்தவனா?
இத்தனை சாதனைகள் அவனுக்குச் சொந்தமா?
இதெல்லாம் இவ்வளவு நாட்கள் தெரியவில்லையே
இப்படியான அங்கலாய்ப்புகளுக்கும்
அனுதாபங்களுக்கும்
போற்றுதலுக்கும்
கொண்டாடுதலுக்கும்
இப்படி எல்லாவற்றிற்கும் ஒருவன்
மரணிக்க வேண்டியிருக்கிறது..

இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவன்
விழிப்புணர்வு ஏற்படுத்தத் துணிந்தவன்
சற்றுமுன் வரை சிரித்திருந்தவன்
எப்படி சில திணிப்புகளால் சட்டென மரித்துப்போனான்?
என்ற கேள்விகள் விடையில்லாமலே
காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
சில சமயம் மழையாகவும் மாறி நனைக்கிறது.

இவள் பாரதி

Pin It